இந்தியப் பொருளாதார மதிப்பை 2025ஆம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி டாலராக உயர்த்துவதற்கு வாய்ப்பே இல்லை என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான சி.ரங்கராஜன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஆட்சிப் பொறுப்பேற்ற நரேந்திரா மோடி அரசு, பொருளாதார வளர்ச்சி குறித்த மிகப் பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. 2025ஆம் ஆண்டுக்குள் இந்தியப் பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலராக உயர்த்தும் இலக்குதான் அந்த அறிவிப்பு.
மத்திய அரசின் இந்த இலக்கு சாத்தியமில்லை என்று பல்வேறு தரப்புகளில் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த விமர்சனங்கள் உண்மைதான் என்று நிரூபிக்கும் அளவுக்கு இந்தியப் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து கடுமையான வீழ்ச்சிகளைச் சந்தித்து வருகிறது.
2016-17ஆம் ஆண்டில் 8.2 சதவீத வளர்ச்சியைக் கொண்டிருந்த இந்தியா 2018-19ஆம் ஆண்டில் வெறும் 6.8 சதவீத வளர்ச்சியை மட்டுமே எட்டியது.
அதோடு மட்டுமல்லாமல் இந்த ஆண்டின் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி மிக மோசமாக 5 சதவீதமாகச் சரிந்தது. இது கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தியா சந்திக்கும் மிகப் பெரிய வீழ்ச்சியாகும்.
இதுபோன்ற சூழலில் அரசின் 5 லட்சம் கோடி டாலர் இலக்கு சாத்தியம்தானா என்ற மிகப் பெரிய சந்தேகம் எழுந்துள்ளது.